ராவத்தம்பட்டி வால் ஏரியில் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர். 
Regional01

வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு - தீயணைப்பு துறையினர் மீட்புப்பணி குறித்து செயல் விளக்கம் :

செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழை தொடங் குவதை முன்னிட்டு திருப்பத்தூர் அடுத்த ரவத்தம்பட்டி வால் ஏரியில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் பொது மக்கள் முன்னிலையில் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் வரும் 26-ம் தேதி (நாளை) முதல் வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரவத்தம்பட்டி வால் ஏரியில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மூலம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ரப்பர் படகு, கயிறு, லைப் ஜாக்கெட், குடிநீர் பாட்டில்கள், வாழை மரம், மூங்கில் மரம் உள் ளிட்டவைகளை பயன்படுத்தி தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணி குறித்து செயல் முறை விளக்கம் அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 5 தன்னார்வலர்களுக்கு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சார்பில் மீட்புப் பணிகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, தொடர் மழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருவதால் பெற்றோர் தங்களது குழந்தைகளை நீர் நிலைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பழனி, வட்டாட்சியர் சிவப்பிரகாசம், ஆதியூர் ஊராட்சி தலைவர் மணி மேகலை, ஊராட்சிச் செயலாளர் கோபிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT