Regional02

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் - மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் : திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாத படித்த இளைஞர்கள் அரசின் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200-ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், இளங்கலை பட்டதாரிகளுக்கு ரூ.600 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்த ஓராண்டு கடந்தவுடன் அவர்களில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.600, 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.750, இளங்கலை பட்டதாரி களுக்கு ரூ.1,000 வீதம் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள பொதுப்பிரிவினர் மற்றும் 2020-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நடப்பு காலாண்டுக்கான உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் திருப்பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்ற பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கல்விச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் வரும் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT