Special

தேனி மாவட்டம் வருசநாடு-காமராஜபுரம் மலை கிராம சாலை சீரமைப்பு பணி தொடக்கம் :

செய்திப்பிரிவு

தேனி மாவட்டம் வருசநாட்டில் இருந்து காமராஜபுரம் மலைகிராமத்துக்குச் செல்லும் தார்ச்சாலை சேதமடைந்திருந்தது. இவற்றை புதுப்பிக்கவும், வழியில் தரைப்பாலங்கள் அமைக்கவும் பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான பணிகள் தொடங்கின.

ஆனால் வழியில் வனத்துறைக்குச் சொந்தமான இடம் இருந்ததால் சாலை சீரமைப்புக்கு இத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இப்பணி முழுமையடையவில்லை. ஏற்கெனவே இருந்த சாலையும் சிதிலமடைந்திருந்ததால் அரசுப் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் ஆட்டோவில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்கும் நிலை ஏற்பட்டது. விளைபொருட்களை கொண்டுசெல்வதிலும் சிரமம் இருந்து வந்தது.

விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இதனடிப்படையில் சாலை சீரமைப்புப் பணிக்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து இப்பணி மீண்டும் தொடங்கியது. இதன்மூலம் உரக்குண்டான்கேணி, பாலசுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராமங்கள் பயன்பெறுவதுடன் விருதுநகர் மாவட்ட பகுதிகளுக்கும் எளிதில் செல்ல முடியும்.

SCROLL FOR NEXT