எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் விளை நிலங்களில் மழை நீர் சூழ்ந்தது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்தது. எடப்பாடியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. இங்கு 47.2 மிமீ மழை பதிவானது.
கனமழையால், எடப்பாடி, பூலாம்பட்டி, வெள்ளரிவெள்ளி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களில், மழை நீர் சூழ்ந்தது. மேலும், தாழ்வான சாலைகளிலும் மழை நீர் குளம்போல தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: ஆத்தூர் 22, மேட்டூர் 17.2, சங்ககிரி 16.4, கெங்கவல்லி 15, தம்மம்பட்டி 10, வீரகனூர் 6, பெத்தநாயக்கன்பாளையம் 4, கரியகோவில் 2 மிமீ மழை பதிவானது. இதனிடையே, சேலத்தில் நேற்று மாலை பரவலாக கனமழை பெய்தது. மக்கள் தீபாவளிக்காக புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்க விடுமுறை நாளான நேற்று கடை வீதிகளில் குவிந்தனர். மழையால் கடை வீதிகளில் தேங்கிய தண்ணீரால் மக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர்.