Regional02

ஓரிட சேவை மையத்தில் பணிபுரிய வாய்ப்பு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் உள்ள ஓரிட சேவை மையத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் போன்ற பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, கருங்குளம் மற்றும் சாத்தான்குளம் வட்டாரங்களைச் சார்ந்த 105 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்ட பயனாளிகள் வசதிக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு ஓரிட சேவை மையம் (ஓ.எஸ்.எப் ) செயல்பட உள்ளது. இந்த மையம் மூலம் அனைத்து வகையான புதிய மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய ஊரக தொழில்களுக்கு தேவையான தொழில் திட்டம் தயார் செய்தல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல், திறன் வளர்ப்பு போன்ற பல பணிகள் மேற்கொள்ளபடுகிறது.

ஓரிட சேவை மையத்தில் தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் (இ.டி.ஓ ) மற்றும் தொழில் முனைவு நிதி அலுவலர் (இ.எப்.ஓ)ஆகிய தற்காலிக பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களில் சேருவதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்பவரின் வயது 40-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகுதிகள் பற்றிய விவரங்களை www.tnrtp.org என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ மாவட்ட திட்ட அலுவலகத்தில் நவ.15-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, பழைய தாலுகா அலுவலகம், பீச் ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியிலும் 0461-2902744 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT