தொழிலாளர் கொலை வழக்கில் சரண டைந்த கடலூர் மக்களவையின் திமுக உறுப்பினர் டி.வி.ஆர்.எஸ்.ரமேஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒரு நாளைக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
பண்ருட்டி அருகே உள்ள பனிக்கன் குப்பத்தில் திமுகவைச் சேர்ந்த கடலூர் எம்பி டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை அமைந்துள்ளது. இங்கு வேலை பார்த்து வந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் கடந்த செப்.19 -ம்தேதி இரவு மர்மமான முறையில் உயிரி ழந்தார். கொலை வழக்காக மாற்றப்பட்டு, சிபிசிஐடி போலீஸார் ரமேஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். கடந்த 11-ம் தேதி பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் மக்களவை உறுப்பினர் ரமேஷ் சரணடைந்தார். நீதிமன்ற காவலில் கடலூர் கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், கடந்த 20-ம் தேதி எம்பி தரப்பில் ஜாமீன் கேட்டு வழக்கறிஞர் சிவராஜ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நேற்று இந்த மனு கடலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது நீதிபதி செந்தில்குமார் விசாரணை நடத்தினார். அப்போது, கோவிந்தராஜ் மகன் செந்தில்வேல் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது ஆட்சேபனை மனு தொடர்பான விவரங்கள் தனக்கு அளிக்கப்படாததால் அந்த மனுவை படித்து பார்க்க, வழக்கறிஞர் சிவராஜ் ஒரு நாள் அவகாசம் கேட்டார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் ஏ.சந்திரசேகரன் மற்றும் செந்தில்வேல் தரப்பு வழக் கறிஞர் தமிழரசன் ஆகியோர் ஆட்சேபணை தெரிவிக்காததைத் தொடர்ந்து மனு மீதான விசாரணையை நீதிபதி இன்றைக்கு (அக்.23) தள்ளி வைத்தார்.
இந்நிலையில் இதே வழக்கில் கைது செய்யப்பட்ட நடராஜன், அல்லாபிச்சை, கந்தவேல், வினோத், சுந்தர்ராஜன் ஆகிய 5 பேரும் நேற்று கடலூர் கிளைச் சிறையில் இருந்து கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி (பொறுப்பு) சிவபழனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 பேரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணையையும் நீதிபதி இன்றைய தினத்துக்கு ( அக்.23) தள்ளி வைத்தார். அப்போதும் 5 பேரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கோவிந்தராஜ் மகன் செந்தில்வேல் சிறைத் துறை தலைவருக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், “கொலை வழக்கில் கைதானவர்களை கடலூர் மத்திய சிறையில் அடைப்பது வழக்கம். ஆனால், மக்களவை உறுப்பினரான ரமேஷ் கடலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மத்திய மற்றும் கிளை சிறைகள் அவரது மக்களவை தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
இதனால், அவர் பல்வேறு சலுகைகளை அனுபவிப்பதோடு சாட்சியங்களை கலைக்கும் பணியையும் மேற்கொள்கிறார். எனவே, அவரை வேறு மாவட்டத்தில் உள்ள சிறைக்கு மாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.