விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஊராட்சிமன்றத் தலைவரின் ஆதரவாளர்கள். 
Regional04

பஞ்சமாதேவி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் - தேர்தலில் முறைகேடு எனக் கூறி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை :

செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு எனக் கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் அருகே பஞ்சமாதேவியில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் தேர்தல் நேற்று நடை பெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, தேர்தலில் போட்டியிட்ட தமிழ்வா ணன் என்பவர் தரப்பினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை நேற்று பிற்பகல் முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் தலைமையிலான போலீ ஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தைநடத்தினர்.

அப்போது, தமிழ்வாணன் கூறியதாவது: பஞ்சமாதேவியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்தல் நேற்றுகாலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டு உறுப்பினர்கள். இவர்கள் 9 பேரும், ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவரும் சேர்த்து மொத்தம் 10 வாக்குகள். நானும், ராஜேஸ்வரி என்பவரும் போட்டியிட்டோம். மறைமுகத்தேர்தலில் இவருக்கும் தலா 5 வாக்குகள் பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்து, குலுக்கல் முறையில் ராஜேஸ்வரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், எனக்கு ஆதரவாக 6 வார்டு உறுப்பினர்களும், ஊராட்சி மன்றத் தலைவரும் இருந்தபோது, எப்படி என்னை எதிர்த்து போட்டியிட்டவருக்கு 5 வாக்குகள் கிடைத்திருக்கும். தற்போது என்னுடனே, எனது ஆதரவாளர்கள் 6 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் ஆட்சியரகத்துக்கு வந்துள்ளனர். ஆகவே, இந்த துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர், விழுப்புரம் டிஎஸ்பி ஆகியோர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மீண்டும் முறையாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறினார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று போலீஸார் சமாதானப்படுத்தினர். இதையடுத்து, அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT