சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத் தலைவரும் மேலாண் இயக்குநருமான சண்முகராஜா பேசினார். உடன் ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் உள்ளனர். 
Regional01

சேலத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு - வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தல் :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத் தலைவருமான மேலாண் இயக்குநர் சண்முகராஜா தலைமையில் நடந்தது. இதில் ஆட்சியர் கார்மேகம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மேலாண் இயக்குநர் சண்முகராஜா பேசியதாவது:

வடகிழக்கு பருவமழை காலங்களில் கடந்தகால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, மழையால் பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களை முன்னதாகவே கண்டறிந்து அங்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் நோய்தடுப்பு மருந்துகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். அனைத்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளிலும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் குளோரினேசன் செய்ய வேண்டும்.

தொற்றுநோய் ஏற்படாத வகையில் அனைத்துப் பகுதிகளிலும் குப்பை தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் சாலையோரங்களில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் தங்கு தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளிலும் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மையினை கண்டறிந்து பழுதுகள் இருப்பின் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். நீர்நிலைகளின் நீர் இருப்பு குறித்த விவரங்களை தினசரி மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் '1077' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 0427-2452202 என்ற தொலைபேசி எண்ணிலோ 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் பள்ளப்பட்டி ஏரி மற்றும் சேலம் ஆனந்தா பாலம் அருகில் திருமணிமுத்தாறு மழை நீர் வடிகால் அமைப்பை ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT