Regional02

வியாபாரிகள்சாலை மறியல் :

செய்திப்பிரிவு

வந்தவாசியில் சாலையோர ஆக்கிரமிப்பு களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்ற முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தி.மலை மாவட்டம் வந்தவாசி நகரம் பஜார் வீதி, தேரடி, கோட்டை மூலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு, வியாபாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறையினர் பலமுறை உத்தரவிட்டு வந்துள்ளனர். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வியாபாரிகள் முன்வரவில்லை. பஜார் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்ற முயன்றபோது வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் தேரடியில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை காவல்துறை பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று காலை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள கால அவகாசம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள மாலை 4 மணி வரை அவகாசம் கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை நெடுஞ்சாலைத்துறை யினர் ஏற்றுக் கொண்டதால், சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை வியாபாரிகளே அகற்றிக் கொண்டனர்.

SCROLL FOR NEXT