FrontPg

பொதுமக்களுக்கு இடையூறாக - விவசாயிகள் சாலையை மறித்து போராடக் கூடாது : உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

செய்திப்பிரிவு

பொதுமக்களுக்கு இடையூறாக காலவரையறையின்றி சாலையை மறித்து போராட்டம் நடத்தக் கூடாது என விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லைப் பகுதியில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நொய்டாவைச் சேர்ந்த மோனிகா அகர்வால், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், விவசாயிகள் சாலையை மறித்து போராடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தீர்வு காண உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த மனு, நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிரசாந்த் பூஷண் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். ‘‘விவசாயிகள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட வேண்டும் என்பதற்காக அரசு வேண்டுமென்றே சாலையில் தடுப்புகளை அமைத்துள்ளது. எனவே, டெல்லியின் ராம் லீலா மைதானம், ஜந்தர் மந்தர் பகுதிகளில் போராட விவசாயிகளை அனுமதிக்க வேண்டும்’’ என அவர்கள் கோரினர்.

ஹரியாணா மாநில அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கடந்த ஜனவரி மாதம் செங்கோட்டை பகுதியில் விவசாயிகள் போராட்டத்தால் நடந்த வன்முறை சம்பவத்தை நினைவுபடுத்தினார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:

விவசாயிகளுக்கு போராட உரிமை உள்ளது. அதே நேரம், அவர்கள் காலவரையறையின்றி தொடர்ந்து சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. யார் வேண்டுமானாலும் சாலையில் இறங்கி போராடலாம். ஆனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. இதை ஷாகீன் பாக் போராட்டம் தொடர்பான வழக்கிலேயே உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

எனவே, இதை மீண்டும் மீண்டும் கூற வேண்டிய அவசியம் இல்லை. அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பல மாதங்களாக நீடிக்கும் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் 3 வாரத்துக்குள் விவசாய அமைப்புகள் பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை வரும் டிசம்பர் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.- பிடிஐ

SCROLL FOR NEXT