இந்த ஆண்டு இறுதிக்குள் கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால், ஜனவரி 21-ம் தேதிதமிழகம் முழுவதும் கள் இறக்கும் போராட்டம் நடத்தப்படும், என தமிழ்நாடு கள் இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தலைமையில் ஈரோட்டில் நடந்தது. மாநில அமைப்பாளர்கள் இல.கதிரேசன், சிப்பி முத்துரத்தினம், எம்.சி.ராமசாமி, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ராமசாமி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
கடந்த 33 ஆண்டுகளாக தமிழகத்தில் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். கள் விடுதலை வேண்டி 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு கள் இயக்கம் மாநில அளவில் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளது.
டாஸ்மாக் மூலம் முறைகேடாக கிடைக்கும் பெரும் தொகையே கள்ளுக்கான தடையை அரசு விலக்காததற்கு காரணமாகும். எங்களது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்கும் என எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால், கள்ளுக்கான தடையை எதிர்த்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து, ஜனவரி 21-ம் தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.