சேலம் அருகே கல்லூரி மாணவி மர்ம மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வனிதா, கண்மணி தம்பதி.. கண்மணி கூலி வேலை செய்து வருகிறார். கண்மணியின் மகள் தித்மிலா (19). இவர் சேலம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை.
இதுதொடர்பாக தித்மிலாவின் பெற்றோர் காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும், சேலம் ஆட்சியர் மற்றும் எஸ்பி-யிடம் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மின்னாம்பள்ளி பகுதியில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக தித்மிலா மீட்கப்பட்டார்.
இந்நிலையில், தித்மிலாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக தித்மிலாவின் பெற்றோர் கூறும்போது, ‘என் மகள் மரணத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் மீது சந்தேகம் உள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்” என்றனர்.