Regional02

புதிய ஷட்டர்கள் பொருத்தும் பணியால் - சாத்தனூர் அணையிலிருந்து 1,350 கனஅடி நீர் வெளியேற்றம் :

செய்திப்பிரிவு

சாத்தனூர் அணையில் புதிய ஷட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து விநாடிக்கு 1,350 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தி.மலை மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்க அணையாக சாத்தனூர் அணை உள்ளது. 119 அடி உயரமுள்ள அணையின் முழு கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடியாகும். அணையில் தற்போது 97.45 அடி உயரத்துக்கு 3,392 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அதேநேரம், அணையில் தற்போது 20 ஷட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அணையில் 99 அடிக்கு மட்டுமே தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து இருப்பதால் அதே அளவு தண்ணீரை அப்படியே வெளியேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அணைக்கான நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி 1,350 கனஅடியாக இருந்தது. அதே அளவுக்கு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல், 60 அடி உயரம் கொண்ட குப்பநத்தம் அணையில் தற்போதைய நிலையில் 57.07 அடி உயரத்துடன் 647.60 மில்லியன் கனஅடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 80 கனஅடி வீதம் நீர்வரத்து இருக்கும் நிலையில் அதே அளவுக்கு அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

மிருகண்டாநதி அணை 22.97 அடி உயரத்துடன் 87.23 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் நேற்று காலை நிலவரப்படி 18.20 அடி உயரத்துடன் 61.610 மில்லியன் கனஅடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 28 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது.

செண்பகத்தோப்பு அணை 62.32 அடி உயரத்துடன் 287.200 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், நேற்று காலை நிலவரப்படி 53.96 அடி உயரத்துடன் 205.149 மில்லியன் கனஅடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 34 கனஅடி வீதம் நீர்வரத்து இருக்கும் நிலையில் 37 கனஅடி அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT