பவானிசாகர் அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்த மூதாட்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரை அடுத்துள்ள ஓலக்காரன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (75). இவரது மனைவி துளசிமணி (68). இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தின் வழியாகச் சென்ற சிலர் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதால், காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.பவானிசாகர் காவல்துறையினர் அங்கு வந்து ஆறுமுகத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தனது மனைவி துளசிமணிக்கு கடந்த 10 ஆண்டுகளாக வலிப்பு நோய் இருந்ததாகவும், கடந்த 14-ம் தேதி தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டு இருந்தபோது, வலிப்பு வந்து கீழே விழுந்ததில் இறந்து விட்டதாகவும், பண்டிகை நாள் என்பதால் அடக்கம் செய்ய யாரும் வரமாட்டார்கள் என நினைத்து, தோட்டத்திலேயே சிறிய குழி தோண்டி அவரது உடலை புதைத்து விட்டதாக, ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை சத்தியமங்கலம் வட்டாட்சியர், டிஎஸ்பி முன்னிலையில், துளசிமணியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மருத்துவக் குழுவினரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் உடல் மீண்டும் புதைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிவு வந்தபின்னர் துளசிமணி இயற்கையாக இறந்தாரா என்பது தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர்.