Regional01

2014 முதல் 2018 வரை பிளஸ் 2 தனித்தேர்வு எழுதி - மதிப்பெண் சான்று பெறாதவர்களுக்கு இறுதிவாய்ப்பு : திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் 2014 மார்ச் முதல் 2018 செப்டம்பர் வரையிலான காலத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதி மதிப்பெண் சான்று பெறாதவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2014 மார்ச் முதல் 2018 செப்டம்பர் வரையிலான காலத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோக மையத்தில் தேர்வர்களால் நேரில் பெறப்படாமலும், அஞ்சல் மூலம் உரிய தேர்வர்களுக்கு அனுப்பி பட்டுவாடா ஆகாமலும் திருச்சி அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உள்ளன.

சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை கழித்தாள் களாக மாற்றும் பொருட்டு அரசிதழில் அறிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, மேற்கண்ட காலத்தில் தேர்வு எழுதி மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பு என்பதால், ஒரு வெள்ளைத் தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தை குறிப்பிட்டு, தேர்வு எழுதிய பருவம், பிறந்த தேதி, தேர்வெழுதிய பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் ரூ.45-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்டு சுய முகவரி எழுதிய உறையை இணைத்து, “உதவி இயக்குநர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், 16/1 வில்லியம்ஸ் சாலை, மத்திய பேருந்து நிலையம் அருகே, திருச்சி” என்ற முகவரிக்கு 31.12.2021-க்குள் அனுப்பி வைத்து, மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

இதே முறைப்படி செப்.2018-க்கு பின்னர் தேர்வெழுதியவர்களும் மதிப்பெண் சான்றிதழ் களை பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT