Regional01

பண்ருட்டி அருகே பெண் கொலை? :

செய்திப்பிரிவு

மேல்காங்கேயன்குப்பத்தில் பெண் ஒருவர் காயத்துடன் இறந்து கிடந்தார்.

பண்ருட்டி அருகே உள்ள மேலக்குப்பத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகள் மாதவிக்கும் (37) மேல்காங்கேயன்குப்பத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சிவலிங்கத்திற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் சிவலிங்கத்தின் தாயார் பார்வதி, சகோதரிகள் வைரம், வாசுகி, மாமனார் ராஜகோபால் ஆகியோர் மாதவியிடம் அடிக்கடி நகை பணம் கேட்டு பிரச்சினை செய்து வந்துள்ளனர். இது சம்பந்தமாக ஊர் முக்கியஸ்தர்கள் பஞ்சாயத்து செய்து சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் குப்புசாமிக்கு அவரது மகள் மாதவி உயிரிழந்துவிட்டதாக போன் வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த குப்புசாமி மற்றும் உறவினர்கள் மேல்காங்கேயன்குப்பம் சென்று பார்த்த போது மாதவியின் கழுத்தில் காயங்கள் இருந்துள்ளன. இதுகுறித்து குப்புசாமி முத்தாண்டிக்குப்பம் போலீஸில் புகார் செய்தார். அதில், தனது மகள் மாதவி கழுத்தில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தார். தனது மகளை அடித்து கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், மகளின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT