விழுப்புரம் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள். 
Regional02

கல்யாணம்பூண்டி ஊராட்சித் தேர்தலில் - முறைகேடு நடந்ததாக ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா :

செய்திப்பிரிவு

கல்யாணம்பூண்டி ஊராட்சித் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அருகே கல்யாணம்பூண்டி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட செல்வி சக்திவேல் மற்றும் அவரது தரப்பினர் நேற்று காலை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பிக்கள் ரவீந்திரன், பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீஸார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாமல் சிலர் அங்குள்ள தரையில் படுத்துக்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

பின்னர் அவர்களிடம் போலீஸார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி குறிப்பிட்ட சிலரை மட்டும் ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளே அனுப்பி வைத்தனர். அப்போது செல்வி சக்திவேல் ஆட்சியர் மோகனிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

அம்மனுவில் கூறியிருப் பதாவது:

நான் கல்யாணம்பூண்டி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டேன். இதில் எனக்கு 84 வாக்குகள் கிடைத்தன. என்னை எதிர்த்து போட்டியிட்ட கலா 60 வாக்குகளும், அன்பரசி 76 வாக்குகளும், ஐஸ்வர்யா 58 வாக்குகளும் பெற்ற நிலையில் 7 வாக்குகள் செல்லாதவை ஆகும். இதன் முடிவில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான வெற்றி சான்றிதழை 2 நாட்கள் கழித்து காணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறினர். அதன்படி 2 நாட்கள் கழித்து சென்றபோது ஐஸ்வர்யா வெற்றி பெற்றதாக அறிவித்து அவருக்கு சான்றிதழ் வழங்கியிருப்பது தெரியவந்தது. இதுபற்றி அங்கிருந்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முறையிட்டதற்கு உரிய பதில் இல்லை. எனவே என்னுடைய வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதற்கான சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT