திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது குறித்தும், அணைகளில்இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா சேர்வலாறு மற்றும் காரையாறு அணைப்பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மழை பகுதிகளில் பெய்தகனமழை காரணமாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 6 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. சேர்வலாறு மற்றும் காரையாறு அணைகளில் அதிகளவில் நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணையில் நீர் வரத்து சற்று குறைவாக உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் பாபநாசம் அனையில் இருந்து 30,000 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து 30,000 கன அடி தண்ணீரும், கடனா நதி அணையில் இருந்து 5,000 கனஅடி தண்ணீருமாக மொத்தம் 65,000 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தற்போது பாபநாசம் அணைக்கு 2,000 கனஅடி நீர்வரத்துஉள்ளது. கடந்த இரு நாட்களாக இந்த அணை மற்றும் சேர்வலாறு அணைக்கு மட்டுமே நீர்வரத்து அதிகளவில் இருந்தது. பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆற்றில்குளிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 88 பகுதிகள்தாழ்வானவை என கணக்கெடுக்கப்பட்டு, 127 பாதுகாப்பு மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக் குழுவைச்சேர்ந்த 70 பேர் விக்கிரமசிங்கபுரத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் , மின்சார வாரியசெயற்பொறியாளர் ரெங்கராஜ், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணாதுரை, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.