புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அவினாஷ் (20). இவர் தனது தங்கை முறை உறவுகொண்ட 8-ம் வகுப்பு மாணவியான 12 வயது சிறுமியை மிரட்டி கடந்த ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி வெளியே சொன்னால் தாயை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை பாகூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை புதுச்சேரி ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாகூர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவினாஷை நேற்று கைது செய்தனர்.