தமிழகத்தில் இதுவரை 5.30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
விருதுநகரில் ரூ.380 கோடி செலவில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டும் பணியை மாநில சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விருதுநகர், நீலகிரி, கள்ளக் குறிச்சி ஆகிய அரசு மருத் துவக் கல்லூரிகளில் தலா 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அரியலூர்,
நாமக்கல், திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும். தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வி படித்தோருக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். சிறப்பு முகாம்கள் மூலம் 1.13 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 5.30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், டீன் சங்குமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.