பட்டுக்கோட்டையில் வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி, டீ கடைக்காரரின் தந்தை வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.24 லட்சம் திருடப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கீழமேடு, கோட்டைக்குளத்தைச் சேர்ந்தவர் துரைமாணிக்கம். இவரது மகன் இளங்கோ(49). இவர், சாமியார்மடம் பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இளங்கோவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், “பாங்க் ஆப் பரோடா வங்கியிலிருந்து பேசுகிறேன். உங்கள் பழைய ஏடிஎம் கார்டை புதுப்பித்து தருகிறோம். பழைய ஏடிஎம் கார்டு தகவல்களை தெரிவியுங்கள்” எனக் கூறியுள்ளார். ஆனால், தன்னிடம் ஏடிஎம் கார்டு இல்லை என தெரிவித்த இளங்கோ, தனது தந்தையிடம் பட்டுக்கோட்டை இந்தியன் வங்கியின் ஏடிஎம் கார்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, செல்போனில் பேசிய நபர் குறிப்பிட்டபடி, இளங்கோ தனது தந்தையின் ஏடிஎம் கார்டை புகைப்படம் எடுத்து அனுப்பியிருக்கிறார். தொடர்ந்து, இளங்கோவின் செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணையும் அந்த நபரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இளங்கோவின் தந்தை துரைமாணிக்கத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.24 லட்சம் எடுக்கப்பட்டதாக, இளங்கோவின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த இளங்கோ இதுதொடர்பாக தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.