திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் விஜயதசமி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெற்றோர் தங்களது குழந்தைகளை கோயிலுக்கு அழைத்து வந்து நெல்மணிகளில் தமிழ் எழுத்துகளை எழுதச் செய்து வித்யாரம்பம் செய்து வைத்தனர்.
தமிழகத்திலேயே சரஸ்வதி அம்மனுக்கு தனிக் கோயில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் அமைந்துள்ளது. இது, ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற ஸ்தலம். சரஸ்வதியை வணங்குவதால் கல்வி ஞானம், கலை ஞானம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. இதையொட்டி சரஸ்வதி பூஜை தினமான நேற்று முன்தினம் இக்கோயிலில் சரஸ்வதி அம்மனின் பாத தரிசனம் நடைபெற்றது. சரஸ்வதி அம்மன் வெண்பட்டு உடுத்தி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதற்கிடையே, கரோனா ஊரடங்கு காரணமாக வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு கோயில்களுக்குள் அனுமதியில்லை என்ற தடை உத்தரவுஅமலில் இருந்தது. ஆனால், நேற்றுமுதல் இந்த தடை உத்தரவை தமிழக அரசு தளர்த்திக்கொண்டதால், விஜயதசமி நாளான நேற்று கூத்தனூர் சரஸ்வதி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். கோயிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பெற்றோர் தங்களின் குழந்தைகளையும் கோயிலுக்கு அழைத்துவந்து, தட்டில் பரப்பப்பட்ட நெல்மணிகளில் தமிழ் எழுத்துகளை எழுதச் செய்து வித்யாரம்பம் செய்து வைத்தனர். மேலும், சிலேட்டில் எழுதச் செய்தும், குழந்தைகளின் நாவில் நெல்மணிகளால் எழுதியும் வித்யாரம்பம் செய்தனர்.