தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சியுடன் தாராசுரம் பேரூராட்சி மற்றும் 13 கிராம ஊராட்சிகளை இணைத்து கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக நகர்ப்புற மக்கள்தொகை 53 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புறத் தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைத்து, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இன்றியமையாதது.
அதனால் பல்வேறு மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாக விரிவாக்கவும், பேரூராட்சிகளை இணைத்து புதிய நகராட்சிகளாக்கவும் பல்வேறு அறிவிப்புகள் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டன. அது தொடர்பான அரசாணைகளை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, கும்பகோணம் நகராட்சியுடன் தாராசுரம் பேரூராட்சி மற்றும் வலையப்பேட்டை, அண்ணலக்ரகாரம், பாபுராஜபுரம், அரூர், பழவாத்தான்கட்டளை, கொரநாட்டு கருப்பூர், சாக்கோட்டை, பெருமாண்டி, உள்ளூர், உமாமகேஸ்வரபுரம், தேப்பெருமாநல்லூர், ஏரகரம், மலையப்பநல்லூர் ஆகிய 13கிராம ஊராட்சிகளையும் இணைக்க ஆணையிடப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இணைக்கப்படுவதன் மூலம் 12.58 சதுர கி.மீ.பரப்பளவு கொண்ட கும்பகோணம் நகராட்சி, 42.95 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மாநகராட்சியாக மாற உள்ளது.
இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியுடன் 2 பேரூராட்சிகள், 6 ஊராட்சிகள் முழுமையாகவும், தர்மபுரம், ராஜக்கமங்கலம் ஆகிய ஊராட்சிகள் பகுதியாகவும் இணைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு, ஏழுதேசம் ஆகிய பேரூராட்சிகளை இணைத்து நகராட்சியாகவும், கரூர் மாவட்டம் புஞ்சை புகளூர் மற்றும் காகித ஆலை புகளூர் ஆகிய பேரூராட்சிகளை இணைத்து புகளூர் நகராட்சியாக அமைக்கவும் உத்தேச முடிவு எடுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருச்சிமாவட்டம் முசிறி, லால்குடி பேரூராட்சிகள் மற்றும் சேலம் மாவட்டம் தாரமங்கலம், இடங்கணசாலை ஆகிய 5 பேரூராட்சிகளையும் நகராட்சிகளாக உருவாக்க உத்தேச முடிவு எடுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருநின்றவூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வடலூர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, கரூர்மாவட்டம் பள்ளப்பட்டி, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ஆகிய 12 பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நாகர்கோவில் மாநகராட்சியுடன் 2 பேரூராட்சிகள், 6 ஊராட்சிகள் முழுமையாகவும்; தர்மபுரம், ராஜக்கமங்கலம் ஆகிய ஊராட்சிகள் பகுதியாகவும் இணைக்கப்பட உள்ளன.