நேபாள நாட்டில் நடைபெற்ற இன்டோ-நேபாள் சர்வதேச சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற லால்குடி அரசு கல்லூரி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் ஏ.ஆறுபடையப்பா. இவர் லால்குடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை தமிழ் பட்டப் படிப்பு படித்து வருகிறார். இவர், இம்மாத தொடக்கத்தில் நேபாளத்தில் நடைபெற்ற இன்டோ- நேபாள் சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். இவரை, கல்லூரி முதல்வர் கி.மாரியம்மாள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
இவர் கடந்த மாதம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இளையோர் ஆசிய விளையாட்டு சம்மேளனம் சார்பில் நடத்தப்பட்ட 4-வது தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.