சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் உள்ளது கோ.மருதப்பபுரம் ஊராட்சி. ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகக் கூறி, இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று சண்முகநல்லூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஜயலெட்சுமி தலைமை வகித்தார். முத்துகிருஷ்ணபுரம், சண்முகநல்லூர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து விஜயலெட்சுமி கூறும்போது, “கோ.மருதப்பபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு 382 வாக்குகள் கிடைத்தன. ஏணி சின்னத்தில் போட்டியிட்டவருக்கு 369 வாக்குகள் கிடைத்தன. பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டவருக்கு 356 வாக்குகள் கிடைத்தன. கை உருளை சின்னத்தில் போட்டியிட்ட வருக்கு 190 வாக்குகள் கிடைத்தன.
ஆனால், மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரும், கோ.மருதப்பபுரம் ஊராட்சி எழுத்தரும் சேர்ந்து ஏணி சின்னத்தில் போட்டியிட்ட வீரம்மாள் என்பவரை வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டனர்” என்றார்.