கோவை: சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கோவை சிறுமி ஒருவர் வெள்ளிப்பதக்கம் வென்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அக்வாடிக் சங்கம் சார்பில் 37-வது மிக இளையோர் மற்றும் 47-வது இளையோர் பிரிவுகளுக்கான நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், கோவையைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஆரிகா, 100 மீட்டர் ஃபிரீ ஸ்டைல் மற்றும் 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவுகளில் பங்கேற்றார். இதில் 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைலில் வெள்ளிப்பதக்கமும், 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைலில் வெண்கலப் பதக்கமும் வென்றார். வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலமாக சிறுமி தேசியப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.