தருமபுரி மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தி, வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீரை முழுமையாக சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், குடிநீர் தரத்தை மேம்படுத்தவும், பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிக்காக விழிப்புணர்வு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் பயணத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்டத்தில் நகராட்சி பகுதிகள், பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் பொது மக்களிடையே மழைநீர்சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத் திரை வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொது மக்களிடம் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் பாபு, நிர்வாக பொறியாளர்கள் சேகர், சங்கரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சீனிவாச சேகர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் பாஸ்கரன், துணை நில நீர் வல்லுநர் கல்யாணராமன், உதவி பொறியாளர் ரகோத்சிங் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.