தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே பணிகள் முடிக்கப்பட்டுள்ள 3-வது புதிய பாதையில் வரும் 21-ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தவுள்ளனர்.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடம் வழியாக ரயில்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சுமார் 30 கி.மீ தூரத்துக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. ரூ.256 கோடியில் 3 கட்டமாக பணிகள் நடைபெற்றன. செங்கல்பட்டு - சிங்கப்பெருமாள் கோவில், சிங்கப்பெருமாள் கோவில் - கூடுவாஞ்சேரி வரை புதிய பாதைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், கூடுவாஞ்சேரி - தாம்பரம் இடையே 3-வது புதிய பாதை பணிகளும் நிறைவு செய்யப்பட்டு 2 கட்டமாக தெற்கு ரயில்வேயின் தொழில்நுட்பம் மற்றும் இயக்க பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 3-வது புதிய பாதையில் ஏற்கெனவே, கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு வரை பணிகள் முடிக்கப்பட்டு ரயில்களின் சேவை தொடங்கியுள்ளது. தற்போது பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே 2 கட்டமாக நாங்கள் ஆய்வு நடத்தி முடித்துள்ளோம். இறுதிகட்டமாக வரும் 21-ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் உட்பட 3 பேர் கொண்ட குழுவினர் வந்து இந்த புதிய தடத்தில் ஆய்வு நடத்துவார்கள். ரயில் தண்டவாளங்கள் தரம், ரயில் நிலையங்களுக்கு செல்லும் நுழைவு பகுதிகள், சிக்னல் தொழில்நுட்பம் மற்றும் கட்டுபாட்டு அறை இணைப்பு குறித்து ஆய்வு நடத்துவார்கள்.
இந்த தடத்தில் ரயிலை வேகமாக இயக்கி சோதனை நடத்துவார்கள். அதன்பிறகு, இந்த தடத்தில் ரயில் சேவை தொடங்க அனுமதி அளிக்கப்படும். இதையடுத்து, இந்த தடத்தில் தேவையான அளவுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்கும்’’ என்றனர்.