தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் மாநகராட்சிப் பகுதிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசின் உதவியுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஊரக உள்ளாட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நகர்ப்புறத்தில் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் அரசுக்கு பரிந்துரைத்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து இத்திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டத்தின் நெறிமுறைகள்படி, சென்னையில் 2 மண்டலங்கள், மீதமுள்ள 14 மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம், 7 நகராட்சிகள், 37 மாவட்டத்துக்கு தலா ஒரு பேரூராட்சி என 37 பேரூராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, சேலம்- அம்மாப்பேட்டை மண்டலம், ஈரோடு- மண்டலம் 4, ஓசூர்- 8- வது சரகங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்.
நகராட்சிகளை பொறுத்தவரை கள்ளக்குறிச்சி, வெள்ளகோவில், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட நகராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. பேரூராட்சிகளை பொறுத்தவரை, தருமபுரி- கம்பைநல்லூர், கிருஷ்ணகிரி- நகோஜனஹள்ளி, சேலம்- காடையாம்பட்டி, நாமக்கல்- ஆர்.புதுப்பட்டி, ஈரோடு- ஜம்பை உள்ளிட்ட பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.