கன்னியாகுமரி மாவட்டத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 22 பேருக்கு தலா 1 கிராம் தங்க நாணயங்களை ஆட்சியர் மா.அரவிந்த் வழங்கினார்.
பின்னர் அவர் கூறும்போது, “ கடந்த 10-ம் தேதி 9 ஊராட்சி ஒன்றியம், நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தும் நபர்களில் ஒவ்வொரு ஒன்றியம், மாநகராட்சி பகுதிகளில் தலா 2 பேர் வீதம் 20 பேரும், மாவட்ட அளவில் 2 பேரும் என மொத்தம் 22 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 22 பேருக்கு நன்கொடையாளர் மூலம் தங்க காசுகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தாத 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கன்னியாகுமரியை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாற்றிட வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவபிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷாஅஜித், பொன் ஜெஸ்லி கல்விக் குழும தலைவர் பொன் ராபர்ட்சிங் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.