சேலம் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும்பரவலாக பல இடங்களில் மழை பெய்தது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் சரபங்கா, திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஏற்காட்டில் 56.8 மிமீ மழைபதிவானது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: வீரகனூர் 38, பெத்தநாயக்கன்பாளையம் 36, கெங்கவல்லி 27.0, மேட்டூர் 22.6, ஆனைமடுவு 21, தம்மம்பட்டி 20, காடையாம்பட்டி 7.2, ஆத்தூர் 6.2, கரியகோவில், சேலம் தலா 4, எடப்பாடி 3, ஓமலூர் 2.4 மிமீ மழை பதிவானது.
சேர்வராயன் மலைத்தொடரில் பெய்த கனமழை காரணமாக ஓமலூர் வழியாக பாயும் சரபங்கா நதி மற்றும் சேலம் வழியாக செல்லும் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால், இரவில் குளிர் காற்று வீசியதோடு, குளிர்ந்த சீதேஷ்ண நிலை நிலவியது.
இதனிடையே, சேலம் மாவட்டத்தில் நேற்று பகலில் பரவலாக கனமழை பெய்தது. சேலத்தில் பெய்த மழையால் அத்வைத ஆசிரம சாலை, பிரட்ஸ் சாலை, மிலிட்டரி சாலை, அம்மாப்பேட்டை பிரதான சாலை, லீ பஜார் சாலை, நெத்திமேடு- செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள தாழ்வான சாலைகளில் மழை நீர் குளம்போல தேங்கியது. இதனால், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.