முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை கடலூர் கிளைச் சிறையில் 2 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சார்பு நீதிமன்ற நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
கடலூர் தொகுதி திமுக எம்.பி.யாக இருப்பவர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ். தொழிலதிபரான இவருக்கு பண்ருட்டி அருகே பனிக்கன்குப் பத்தில் முந்திரி ஆலை ஒன்று உள் ளது. இங்கு பணிபுரிந்து வந்த கோவிந்தராசு (55) என்ற தொழி லாளி, கடந்த மாதம் 19-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக காடாம்புலியூர் போலீஸார், மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்களும் பாமகவினரும் குற்றம்சாட்டினர். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி பாமகவினர் உள்ளிட்டோர் போராட் டங்களில் ஈடுபட்டனர். இதனி டையே, விழுப்புரம் முண்டியம் பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் இருந்து அளிக்கப் பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை யில், கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்பின், திமுக எம்.பி. ரமேஷ் மற்றும் முந்திரி ஆலையில் பணியாற்றிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போஸீஸார், ரமேஷை தவிர மற்றவர்களை கைது செய்தனர்.
கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ரமேஷ் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்கப்பட்டது. ரமேஷை சரண டையச் சொல்லி திமுக தலைமை உத்தரவிட்டதாக தகவல்கள் வெளி யாயின. ‘இந்த வழக்கில் முதன்மை எதிரியை கைது செய்யாமல் அவரது உதவியாளர்களை கைது செய்வதால் எந்தப் பயனும் இல்லை’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து கூறியிருந்தார். ‘கொலை குற்ற வழக்குகளில் மக்கள் பிரதிநிதிகள் சிக்கினால், அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், ரமேஷ் நேற்று காலை பண்ருட்டி சார்பு நீதிமன்றத் துக்கு வந்தார். நீதித்துறை நடுவர் வரும் வரை காத்திருந்தார். பின்னர் நீதித்துறை நடுவர் கற்பகவள்ளி வந்ததும் அவர் முன்பு சரணடைந் தார். அப்போது, ரமேஷை கடலூர் மத்திய சிறையில் அடைக்குமாறு அவரது வழக்கறிஞர் பக்கிரிசாமி கோரினார்.
அதற்கு நீதித்துறை நடுவர், ‘‘கரோனா பரவல் தருணத்தில் உடனடியாக மத்திய சிறைக்கு அனுப்ப இயலாது. மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில், முதலில் அவர் கடலூர் கிளைச் சிறையில் 12, 13 ஆகிய இரு தினங்கள் நீதிமன்றக் காவலில் இருக்கட்டும்’’ என உத்தரவிட்டார்.
இதையடுத்து ரமேஷை கரோனா பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். பின்னர், பலத்த பாதுகாப்புடன் கடலூர் கிளை சிறைக்கு கொண்டு செல்லப் பட்டார். கரோனா பரிசோதனை முடிவு தெரியும்வரை கடலூர் கிளைச் சிறையில் ரமேஷ் இருப்பார் எனவும், பரிசோதனை முடிவு அறிக்கையின் பேரில் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், நாளை (அக்.13) கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் முன்பு ரமேஷை ஆஜர்படுத்தும்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் கோருவர் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘என் மீதான புகார் ஆதாரமற்றது’
இதுதொடர்பாக எம்.பி., ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘என்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்த கோவிந்தராசு என்பவர் மரணம் தொடர்பாக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், திமுக மீது சில அரசியல் கட்சிகள் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரச்சாரம் மேற்கொண்டிருப்பது என் மனதுக்கு நெருடலாக இருக்கிறது. நான் உயிரினும் மேலாக போற்றும் என் தலைவரின் நல்லாட்சி மீது வீண்பழி சுமத்தி வருபவர்களுக்கு மேலும் இடம் கொடுக்க வேண்டாம் என்று கருதி, சிபிசிஐடி தொடர்ந்துள்ள இவ்வழக்கில் சரணடைகிறேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன்’ என்று தெரிவித்துள்ளார்.