குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் சேலம் மாநகராட்சியில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், குடிநீர் இணைப்புக் கோரி 12 மனுக்கள், சுகாதார வசதி கோரி 23 மனுக்கள், வாரிசு வேலை வழங்கக்கோரி 9 மனுக்கள், அடிப்படை வசதிகள் கோரி 18 மனுக்கள் உள்ளிட்ட 101 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. மனுக்களைபெற்ற பின்னர் ஆணையர் பேசியதாவது:
சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து மக்கள் 101 மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பப்பட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மனுதாரருக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும். இந்த வாரம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அடுத்த வாரம் மனுக்கள் பெறும் முன்னர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) சபீர்ஆலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.