கரோனாவால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகைரூ.3 லட்சத்தை ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். படம்: எஸ்.குரு பிரசாத் 
Regional01

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த - 167 குழந்தைகளுக்கு ரூ.5.45 கோடி உதவித்தொகை வழங்கல் :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 167 குழந்தைகளுக்கு அரசு சார்பில் நிவாரண உதவித்தொகை மொத்தம் ரூ.5.45 கோடி வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு அரசின் நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், 46 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.38 கோடி நிவாரண உதவிதொகைக்கான காசோலைகளை ஆட்சியர் கார்மேகம் வழங்கி பேசியதாவது:

பெற்றோர் இருவரும் கரோனா தொற்றினால் உயிரிழந்ததால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி, அரசு இல்லங்களில் முன்னுரிமை, பட்டப்படிப்பு நிறைவு செய்யும் வரை கல்வி மற்றும் விடுதி செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கும். பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர்கள், பாதுகாவலர்களின் பாதுகாப்பில் வாழும் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

கரோனாவால் பெற்றோரில் யாரேனும் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவித்தொகை அரசு வழங்கி வருகிறது. சேலம் மாவட்டத் தில் பெற்றோரில் ஒருவரை கரோனா தொற்றி னால் இழந்த 46 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.38 கோடி நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 167 குழந்தை களுக்கு ரூ.5.45 கோடி நிவாரண உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், கல்விச் செலவு, மருத்துவம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஊன்றுகோல் மையத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

கரோனா தொற்றினால் பெற்றோரை இழந்தவர்கள் எவ்வித தயக்கமும் காட்டாமல் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஷேக் அப்துல் ரஹ்மான், முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT