Regional02

அனைவருக்கும் உரிமைகள் சமமாக கிடைக்க வேண்டும் : சட்ட விழிப்புணர்வு முகாமில் திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி கருத்து

செய்திப்பிரிவு

சட்ட விழிப்புணர்வு முகாம்கள் மூலமாக பலதரப்பட்ட மக்கள் பயன்பெற்று வருகின்றனர் என திருப்பூர் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி பாரதி பிரபா தெரிவித்தார்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளி விழா ஆண்டையொட்டி, அக்டோபர் 2-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்டம் முழுவதும் சட்டவிழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக வடமாநிலத் தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் குமரன் சாலையில் உள்ள பழைய சார்பு நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், 100-க்கும்மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர் கள் பங்கேற்றனர்.

நிகழ்வில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாரதி பிரபா தலைமை வகித்து பேசும்போது, ‘‘சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் மூலமாக பலதரப்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். பலர் தங்களது பிரச்சினைகளுக்கு இந்த முகாம்களில் கிடைக்கும் விழிப்புணர்வால் தீர்வும் பெற்றுள்ளனர். அனைவருக்கும் உரிமைகள் சமமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது,’’ என்றார். முன்னதாக, திருப்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் உதயசூரியா பேசினார். இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் முகமதுகான், பிள்ளைக்குமார், ஜோதிவேலு, காவல் ஆய்வாளர்கள் பிரேமா, தமிழ்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கயம்

SCROLL FOR NEXT