நீலகிரி ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரயில் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையால் ஆடர்லி-கல்லாறு இடையே மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டன, மண் சரிவும் ஏற்பட்டது. இதனால், நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து 167 பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில், ஆடர்லி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் கல்லாறு ரயில் நிலையத்துக்கு ரயில் திருப்பி அனுப்பப்பட்டது. அங்கிருந்து பேருந்துகள் மூலம் பயணிகளை உதகைக்கு அனுப்ப ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்தது. ஆனால், 59 பயணிகள் மட்டுமே பேருந்தில் உதகை செல்ல விருப்பம் தெரிவித்தனர்.
இதனால், இரு பேருந்துகள் மூலம் அவர்கள் உதகைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள பயணிகளுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது. நேற்று மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
குன்னூர்-உதகை இடையே வழக்கம்போல ரயில் இயக்கப்பட்டது. ரயில் பாதையில் விழுந்து கிடக்கும் பாறைகளை அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.