ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி சீட்களின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்தி வழங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தேவிபட்டினத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ராமநாதபுரத்தில் தடுப்பூசி செலுத்தப்படுவது மாநில சராசரியைவிடக் குறைவாக உள்ளது. இதை அதிகப்படுத்தும் நோக்கில் இன்று(நேற்று) ஒரே நாளில் 670 இடங்களில் 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு 100 இடங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதை 150 இடங்களாக உயர்த்தி வழங்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
நவாஸ்கனி எம்பி, எம்எல்ஏக்கள் முத்துராமலிங்கம்(ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி) , மாவட்ட ஆட்சியர்(பொ) ஆ.ம.காமாட்சி கணேசன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.