கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் இருந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 17 ஆயிரத்து 665 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 16 ஆயிரத்து 163 கனஅடியானது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 750 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட, நீர் திறப்பு குறைவாக இருப்பதால், நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 79.07 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 80.31 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 42.26 டிஎம்சி-யாக உள்ளது.