காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் நிகழாண்டு குறுவை பருவத்தில் இலக்கை தாண்டி 4.31 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால், டெல்டா மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தனியார் வியாபாரிகளை காட்டிலும், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நல்ல விலை கிடைப்பதால், காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை எனக் கருதி, விவசாயிகள் நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக கொள் முதல் நிலையங்கள் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் நெல்லை குவியல் குவியலாக கொட்டி விற்பனை செய்ய வாரக்கணக்கில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
நெல்லில் 17 சதவீதத்துக்கு குறைவாக ஈரப்பதம் இருந்தால் மட்டுமே, கொள்முதல் செய்யப் படுகிறது. ஆனால், டெல்டா மாவட்டங்களில் பகலில் வெயில் அடிப்பதும், இரவில் மழை பெய்வதும் வாடிக்கையாகி உள்ளது. விவசாயிகள் பகலில் வெயிலில் நெல்லை உலர்த்தி காய வைத்தால், இரவில் பெய்யும் மழை ஈரப்பதத்தை கூட்டி விடுகிறது. இதனால், கொள்முதல் நிலை யங்கள் திறந்திருந்தும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கொள்முதல் நிலை யங்களிலேயே இரவு, பகலாக காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து தமிழக விவசா யிகள் சங்கத்தின் டெல்டா மாவட்டங்களின் ஒருங்கிணைப் பாளர் ப.ஜெகதீசன் கூறும்போது, “குறுவையில் மகசூல் அதிகமாக கிடைக்கும் என்பதால் விவசாயி கள் அதிகளவில் பயிரிட ஆர்வம் காட்டுகின்றனர். குறுவை அறுவடை காலம் எப்போதும் மழைக்காலத் தில் தான் நடைபெறும், அறுவடை செய்யப்பட்ட நெல்களில் ஈரப்பதம் அதிகமாக காணப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது 17 சதவீதம் மட்டுமே கொள்முதல் செய்யப் படுகிறது. மேலும், கடந்த சில நாட்களாக இரவில் தொடர்ந்து மழை பெய்வதால், பகலில் காய வைத்தாலும், நெல்லின் ஈரப்பதம் குறையாமல் இருக்கிறது. இதனால், கொள்முதல் நிலையங்கள் திறந்திருந்தாலும், ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்” என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தினர் கூறும்போது, “17 சதவீதத்துக்கும் குறைவாக ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளாதால், அதன்படி கொள்முதல் செய்யப்படுகிறது.
கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ள நெல்லை ஒரு நாளைக்கு இரண்டு முறை ஈரப்பதத்தின் அளவை பரிசோதனை செய்து, அதில் ஈரப்பதம் குறைந்த பின்னர் அந்த நெல் கொள்முதல் செய்யப் படுகிறது. ஈரப்பதம் கூடுவதால், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் நாளொன்றுக்கு சராசரியாக 600 மூட்டைகள் தான் கொள்முதல் செய்யப்படுகிறது. மழை இல்லாமல் இருந்தால் மட்டுமே கொள்முதல் பணி தீவிரமடையும்” என்றனர்.