கட்டுமானப் பொருட்கள் விலையை நிர்ணயம் செய்ய குழு அமைப்பது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படடுள்ளதாக கிருஷ்ணகிரியில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் பங்கேற்று, 150 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி, கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு வழங்குவதற்காக மாவட்டஅளவில் ஆய்வுகளை மேற்கொண்டு, நலவாரியத்தின் பணிகளை விரைவாக முடிக்கப்பட்டு வருகிறது.
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், தொழிலாளர்கள் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை கொண்டு இணையதளம் மூலம் தொழிலாளர் நலவாரியத்தில் எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். இம்மாவட்டத்தில் மட்டும் கட்டுமான நலவாரியத்தில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 286 பேர் பதிவு செய்துள்ளனர்.
கட்டுமான தொழிலில் விலைஏற்றம் என்பது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய நிரந்தரமாக செயல்படக்கூடிய விலை நிர்ணய குழு அமைக்கப்பட வேண்டும். இதுகுறித்து முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடாஜலபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.