ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவாகாவிட்டாலும் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் பதிவுமுறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி விரல் ரேகை பதிவுக்குப் பிறகே பொருட்கள் விநியோகிக்க வேண்டும். முதியோர், மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியர்கள் அல்லது வட்ட வழங்கல் அலுவலர்கள் அனுமதி பெற்று விரல் ரேகை பதிவின்றி பிராக்ஸி முறையில் பொருட்கள் வழங்கலாம்.
மற்ற கார்டுதாரர்களுக்கு பிராக்ஸி முறையில் பொருட்கள் வழங்கிய விற்பனையாளர்களுக்கு வழங்கல் பிரிவு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ஆனால், ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்ட பாயின்ட் ஆப் சேல்ஸ் கருவிகள் 2 ‘ஜி’-யில் இயங்குகின்றன.
கார்டுதாரர்கள் விரல் ரேகை வைத்தாலும் உடனடியாகப் பதிவு ஆவதில்லை. 10 நிமிடம் காத்திருந்து பதிவு செய்ய வேண்டி உள்ளது. இதனால் கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில் கடை ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். கார்டுதாரர்களும் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
மேலும் பலருக்கு விரல் ரேகை தெளிவாக இல்லாததால் பாயின்ட் ஆப் சேல்ஸ் கருவியில் பதிவு ஆவதில்லை. இதனால், அவர்களுக்கு பொருட்கள் வழங்காமல் திருப்பி அனுப்பியதோடு ஆதாரில் விரல் ரேகையைச் சரி செய்து வருமாறு தெரிவித்தனர். இதனால், கார்டுதாரர்கள் ஆதார் மையங்களில் குவிந்து வந்தனர்.
இந்நிலையில், விரல் ரேகை பதிவாகாவிட்டாலும் ரேஷன் பொருட்களை வழங்கலாம். இந்தக் காரணத்துக்கு கார்டுதாரர்களை அலைக்கழிக்கக் கூடாது என உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.