‘சேலம் மாவட்டத்தில் நாளை (10-ம் தேதி) நடைபெறும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,’ என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களிடம் கூறியது:
சேலம் மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை 38, 33, 280 பேர் உள்ளனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 27 லட்சத்து 98 ஆயிரத்து 294 பேர். இதில் 17 லட்சத்து 17 ஆயிரத்து 306 பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். இது 61 சதவீதமாகும். மீதமுள்ள 10 லட்சத்து 80 ஆயிரத்து 988 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.
இவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாளை (10-ம் தேதி) நடைபெறும் கரோனா தடுப்பூசிசிறப்பு முகாமில் சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென சேலம் மாவட்டத்தில் 1392 இடங்களில் முகாம் நடத்தப்படவுள்ளது.
இதற்காக வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்திடாதவர்களை கண்காணித்து அவர்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் அனைத்துத் துறையைச் சேர்ந்த 18, 525 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாளை மறு நாள் நடக்கும் முகாமில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.