திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் 5-வது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களில் 3 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 32 இன்ச் கலர் டிவி பரிசாக வழங்கப்படும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 9.45 லட்சம் ஆகும். இதில், 5 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 4.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி மீது இன்னும் சிலருக்கு பயம் இருப்பதால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியவில்லை.
எனவே, மக்களிடம் உள்ள பயத்தை போக்க நடமாடும் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு, வீடு, வீடாக சென்று மக்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, விடுபட்டவர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி பகுதிகளில் 6 நடமாடும் குழுவும், 3 பேரூராட்சிப்பகுதிகளில் 2 நடமாடும் குழுவும், 208 கிராம ஊராட்சிகளில் 30 ஊராட்சிகளுக்கு தலா 2 குழுவும் மற்ற ஊராட்சிகளுக்கு தலா ஒரு குழுவும் அமைக்கப்பட்டு கரோனா விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகளில் தினசரி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்துக்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. மாநில சுகாதாரத்துறை மூலம் கடந்த மாதம் 12-ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் தடுப்பூசி முகாமில் 40 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற 2, 3 மற்றும் 4-வது மெகா தடுப்பூசி முகாமில் எதிர்பார்த்த அளவுக்கு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை. இதனால், பிற மாவட்டங்களை காட்டிலும் திருப்பத்தூர் மாவட் டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது. 4 வாரங்களில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம் 1.10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 31 ஆயிரம் நபர்கள் அவர்களுக்கான காலக்கெடு கடந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு 2-தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அழைப்பு விடுத்துள் ளோம். அவர்களை கண்காணித்து தவறாமல் 2-வது தவணை தடுப்பூசி போடவும் மருத்துவக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
அக்டோபர் 10-ம் தேதி (நாளை) மாவட்டம் முழுவதும் 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5-வது மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்து 3 பேருக்கும் தலா 32 இன்ச் கலர் டிவி பரிசாக வழங்கப்படும்’’ இவ்வாறு அவர் கூறினார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் உடனிருந்தார்.