திருப்பூர்:உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் மற்றும் பல்லடத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உண்ணிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பல்லடத்தில் கொசவம்பாளையம் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் கே.வி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரவீன்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வை.பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் ஏ.பஞ்சலிங்கம் உட்பட பலர் பேசினர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார்.பிஏபி பாசன சபை முன்னாள் தலைவர் கோபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டச் செயலாளர்ஆர்.குமார், சிஐடியு மாவட்ட தலைவர் கே. உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.
கண்டனம்: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டதலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தர பிரதேச மாநிலத்தில் அமைதியான முறையில் அவர்களுடைய உரிமைகளை கேட்கிற வகையில் பேரணியாக சென்ற விவசாயிகள்மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதை கண்டிக்கிறோம். தொடர்புடையவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.