தெற்கு ரயில்வேயின் முதுநிலை துணை பொதுமேலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்பு தலைமை அதிகாரியாக பி.மகேஷ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய ரயில்வே மெக்கானிக்கல் பொறியாளர்கள் தேர்வு மூலம் ரயில்வேயில் பணியை தொடங்கிய பி.மகேஷ், ரயில்வே துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.
இவர் தெற்கு ரயில்வே, வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே, ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
திருச்சியில் உள்ள பொன்மலை பணிமனை, பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிகள் பணிமனை, அசாமில் உள்ள புதிய போங்கைகான் பணிமனை என்ற இந்திய ரயில்வேயில் மூன்று பணிமனைகளின் தலைமை பணிமனை மேலாளராக பணியாற்றியவர்.
சமீபத்தில் சென்னை கோட்ட மேலாளராக பணியாற்றிய இவர், தற்போது தெற்கு ரயில்வே முதுநிலை துணை பொது மேலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்பு தலைமை அதிகாரியாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவ்வாறு தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.