நத்தம் அருகே அனுமதியின்றி குவாரியில் இருந்து வெள்ளை கற்களை ஏற்றிவந்த லாரியை நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் சிவசங்கரன் தனது காரை குறுக்கே நிறுத்தி சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி சாலையில் உள்ள தேத்தாம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான வெள்ளைக் கல் குவாரி உள்ளது. அந்தக் குவாரிக்கு சொந்தமான டிப்பர் லாரியில் வெள்ளைக்கற்களை ஏற்றிக்கொண்டு நத்தம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வழியே காரில் சென்ற நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவசங்கரன் காரை சாலையின் குறுக்கே நிறுத்தி வழிமறித்து லாரியை சிறை பிடித்தார்.
உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்வதாக கூறி போலீஸார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அரை மணி நேரமாக தனி ஒருவராக லாரியை தொடர்ந்து செல்ல விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த நத்தம் சப் இன்ஸ்பெக்டர் சேகர் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். சிவசங்கரன் புகாரில் நத்தம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.