திருப்பத்தூரில் சிவகங்கை சாலையில் குப்பைக் கிடங்காக மாறிய பணியாரேந்தல் கண்மாய். 
Regional03

திருப்பத்தூரில் குப்பைகளை கொட்டி - 7 ஏக்கர் கண்மாயை மூடிய பேரூராட்சி நிர்வாகம் :

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத் தூரில் 7 ஏக்கர் கண்மாயையே குப்பைகளை கொட்டி பேரூராட்சி நிர்வாகம் மூடி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பத்தூரில் உள்ள 18 வார்டுகளில் 22 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு தினமும் சேகரமாகும் குப்பைகளை, சிவகங்கை சாலையில் மின் வாரி யம் அருகேயுள்ள பனியாரேந்தல் கண்மாயில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பேரூராட்சி நிர்வாகம் கொட்டி வந்தது. இதனால் 7 ஏக்கர் கண்மாயே மாயமானது. மேலும் குப்பையை அடிக்கடி எரித்ததால் பாதிப்பு ஏற்பட்டது. துர்நாற்றமும் வீசியது.

பொதுமக்கள் புகார் தெரிவித்ததையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி சார்பில் குப்பைகளைத் தரம் பிரித்து உரமாக்கும் பிரிவு அருகிலேயே ஏற்படுத்தப்பட்டது.

மக்கள் தொகை பெருக்கத்தால் குப்பைகளை தரம் பிரிக்க முடியாமல், மீண்டும் கண்மாயிலேயே குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதையடுத்து தனியார் கழிவுநீர் அகற்றும் வாகனங்களும் கண்மாயிலேயே கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அடிக்கடி குப்பைகளை எரிப்பதால் அப்பகுதியில் செல்லும் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்படுகிறது.

இதுகுறித்து சமூகஆர்வலர்கள் ரகீம், ராஜேஷ் ஆகியோர் கூறியதாவது: பணியாரேந்தல் கண்மாய் மூலம் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றன. காலப்போக்கில் பேரூராட்சி நிர்வாகத்தினர் அந்தக் கண்மாயையே குப்பைக் கிடங்காக்கி விட்டனர்.

தற்போது கண்மாய் இருந்த சுவடு தெரியாமல் 7 ஏக்கரும் மறைந்துவிட்டது. வியாரிகள் கோழி, ஆடு இறைச்சிக் கழிவுகளை கொட்டுகின்றனர்.

நகரின் நுழைவாயிலில் உள்ள இந்த குப்பை மேட்டால், பேருந்துகளில் வருவோர் முகம் சுழிக்கும் நிலை உள்ளது.

இதனால் குப்பைகளை முழுமையாக அகற்றி கண்மாயை மீட்க வேண்டும். குப்பைகளை தரம் பிரிக்கும் பிரிவை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும், என்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘குப்பைகளை தற்போது கண்மாயில் கொட்டுவதில்லை என சுருக்கமாக பதில் அளித்தனர்.

SCROLL FOR NEXT