Regional02

புரட்டாசி அமாவாசையையொட்டி - சேலம் உழவர் சந்தைகளில் ரூ.76.31 லட்சத்துக்கு வர்த்தகம் :

செய்திப்பிரிவு

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை ரூ.76.31 லட்சத்துக்கு விற்பனையாகின.

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, ஆத்தூர், மேட்டூர் என 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. வழிபாட்டுக்கு காய்கறிகள், பழங்கள் அதிகமாக பயன்படுத்துவதால், முக்கிய விரத நாட்களில் உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் அதிகளவில் விற்பனையாகின்றன.

இந்நிலையில், புரட்டாசி மகாளய அமாவாசை தினமான நேற்று, உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் வாங்க 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ஆத்தூரில் அதிகபட்சமாக விற்பனை நடந்தது. இங்கு 42.762 டன் காய்கறிகள், 5.675 டன் பழங்கள் மொத்தம் ரூ.15.73 லட்சத்துக்கு விற்பனையானது.

சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் 46.023 டன் காய்கறிகள், 7.325 டன் பழங்கள் மொத்தம் ரூ.13.03 லட்சத்துக்கு விற்பனையானது. தாதகாப்பட்டி உழவர் சந்தையில் 38.364 டன் காய்கறிகள், 7.480 டன் பழங்கள் என மொத்தம் ரூ.13.19 லட்சத்துக்கு விற்பனையானது.

சேலம் அஸ்தம்பட்டி உழவர் சந்தையில் ரூ.5.66 லட்சம், அம்மாப்பேட்டையில் ரூ.5.85 லட்சம், ஆட்டையாம்பட்டியில் ரூ.3.46 லட்சம், இளம்பிள்ளையில் ரூ.3.32 லட்சம், எடப்பாடியில் ரூ.4.03 லட்சம், ஜலகண்டாபுரத்தில் ரூ.2.53 லட்சம், மேட்டூரில் ரூ.4.76 லட்சம், தம்மம்பட்டியில் ரூ.4.69 லட்சம் என மாவட்டத்தில் முழுவதும் உள்ள 11 உழவர் சந்தைகளில் மொத்தம் ரூ.76.31 லட்சத்துக்கு 233.607 டன் காய்கறிகள், 33.669 டன் பழங்கள் விற்பனையாகின.

SCROLL FOR NEXT