காரைக்கால்: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் காரைக்கால் மாவட்ட அரசுத் துறையினருடனான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காரைக்கால் ஆட்சியர் அர்ஜூன் சர்மா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கூட்டம் குறித்து அரசுத் துறையினர் தரப்பில் கூறியது: பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், போதுமான தடுப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்யும் வகையில் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். தாழ்வான பகுதிகளில் மழையால் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், அங்குள்ள மக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கான திட்டமிடல்களை செய்திருக்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார் எனக் கூறினர்.