காரைக்கால் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்கள் சிலர் ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று கூடினர். அப்போது, ஊழியர் சார்லஸ் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதை, பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து, தினக்கூலி ஊழியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரகுநாயகம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கூறியதன்பேரில், 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறியது: மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தினக்கூலி ஊழியர்கள் 61 பேர், நிரந்தர ஊழியர்கள் 70 பேர் பணியாற்றுகிறோம். கடந்த 50 மாதங்களாக புதுச்சேரி அரசு ஊதியம் தரவில்லை. கரோனா பரவல் காலத்தில், ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று, மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் பணியில் தினக்கூலி ஊழியர்கள் ஈடுபட்டோம். அதற்கான கமிஷன் தொகையை அரசு விடுவித்த நிலையில், காரைக்காலில் அதை பகிர்ந்தளிப்பதில் கூட்டுறவு துறை அதிகாரி மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் சங்க மூத்த நிர்வாகிகள் பாரபட்சம் காட்டினர்.
அரிசி வழங்கும் பணியில் ஈடுபடாதவர்களுக்கு கூடுதல் தொகையும், பணி செய்தவர்களுக்கு குறைந்த தொகையும் தரப்பட்டது. இது ஏற்கத்தக்கதல்ல.
இதை அரசின் கவனத்துக்கு கொண்டுவரவே போராட்டத்தில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.